திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கானாபாடிபுதூரை சேர்ந்த அந்தோனியம்மாள்–சூசை மகள் திவ்யா ஜெரினா(வயது 21)-க்கும், அஞ்சல்காரன்பட்டி அடுத்த சீத்தப்பட்டியை சேர்ந்த சுசிலாமேரி – அந்தோனிசாமி மகனான பெயிண்டிங் வேலை செய்து வரும் அகஸ்டின்ராபர்டிற்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. தற்போது அதிபன்ஜோயல் என்ற இரண்டரை வயது மகனும், ஜயோக்கிய ஆதிரா என்ற 6 மாத மகளும் உள்ளனர். அவ்வப்போது கணவன், மனைவிக்கிடையே குடும்பத்தாரார்களால் தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
திருமண நாளான நேற்று வழக்கம்போல் பெரியோர்களால் கணவன்– மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அகஸ்டின்ராபர்ட் வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்தவர்களும் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த திவ்யா ஜெரினா, சேலையால் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. வீடு திரும்பிய உறவினர்கள் இதுகுறித்து அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திவ்யா ஜெரினா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின் மாலையில் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
திவ்யா ஜெரினா உயிரிழப்பு குறித்து முன்னதாக ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சிந்துஜா விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வையம்பட்டி போலீசார் திவ்யா ஜெரினா உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். திருமண நாளிலேயே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.