5 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டகோவில் : பக்தர்கள் மகிழ்ச்சி
திருச்சி, அக்.2 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த களத்துப்பட்டியில் ஸ்ரீராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் கோவில் 2019ம் ஆண்டு மூடப்பட்டது. இந்நிலையில் இருதரப்பினரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். அதன்படி கோவிலை திறந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் வழிபாடு நடத்திக் கொள்ள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வருவாய்துறையினர் இன்று களத்துப்பட்டிக்கு சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கோவிலின் பூட்டை உடைத்து திறந்தனர். இதனைத்தொடர்ந்து கோவிலை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு இருதரப்பினரும் தனித்தனியே வழிபாடு செய்தனர். இருப்பினும் கோவில் சாவி எந்த தரப்பிடம் இருப்பது என்பது தொடர்பான பிரச்சனை நீடித்ததால் கிராம நிர்வாக அலுவலரிடம் இருக்க முடிவு செய்யப்பட்டது. 5 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.