மணப்பாறை நகராட்சி குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து; கொழுந்துவிட்டு எரிந்த தீயால் பரபரப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி குப்பைக் கிடங்கு திண்டுக்கல்– திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செவலூர் பிரிவு சாலை அருகே உள்ளது. மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கும் குப்பைக்கிடங்கில் அவ்வப்போது தீ விபத்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் நேற்று இரவு குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
காற்றின் வேகம் அதிகரிக்க தீயின் வேகமும் அதிகரித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததுடன் குப்பைக்கிடங்கின் முன்பகுதியில் முழுவதுமாக தீ எரிய ஆரம்பித்தது. இதுமட்டுமின்றி கடும் புகைமூட்டமும் ஏற்பட்டது. மேலும் அருகில் மின்மாற்றி இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த பொதுமக்களும், நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கும் மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் நிலைய அலுவலர் சக்திவேல் மூர்த்தி தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கடுமையான போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக காணப்பட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.