ஏர்போர்ட்டுக்கு இணையாக பேசப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் தற்போதைய அவல நிலை

0 14
Stalin trichy visit

திருச்சி, அக்.12 ஏர்போர்ட்டுக்கு இணையாக பேசப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் தற்போதைய அவல நிலை

பயணிகள் நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள் – சாலையில் அமர்ந்து உணவு அருந்தும் பயணிகள்.புகையை பறக்கவிடும் உணவகங்களால் ஏசி போடாத நிர்வாகம் என குளறுபடிகளால் சிக்கித்தவிக்கும் பஞ்சப்பூர் பேருந்து முனையம்

கடந்த 2025ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம். திருச்சி-மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் புதிய பேருந்து முனையம் ரூ.246 கோடி செலவில் கட்டப்பட்டது.

இந்தப் பேருந்து முனையத்தில் மொத்தம் 401 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்த வசதிகள் உள்ளன. இதன்படி நகரப் பேருந்துகளுக்கு 56 நிறுத்துமிடங்கள், வெளியூா் பேருந்துகளுக்கு 141, மற்ற பேருந்துகள் வந்து செல்ல 120 நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி 1,935 இருசக்கர வாகனங்கள், 216 காா்கள், 100 ஆட்டோக்கள் நிறுத்தவும் வசதி உள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் குளிரூட்டப்பட்ட வசதி, 12 லிஃப்ட்கள்‌ மற்றும் எலிவேட்கள் உள்ளது. ஆண்களுக்கு 52 கழிப்பிடங்களும், பொதுப்பணித்துறைக்கு 4 கழிப்பிடங்கள், பெண்களுக்கு 81 கழிப்பிடங்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 2 கழிப்பறைகளும், 21 குளியலறைகள், 173 சிறுநீர் கழிப்பிடங்களும் உள்ளன.

மேலும் பல லட்சங்கள் செலவு செய்து புட்கோர்ட் உள்ளிட்ட பல வகையான கடைகள் அமைக்கப்பட்ட நிலையில் உணவகங்களுக்கு … ஏசி பேருந்து முனையம் என்பதால் கேஸ் பயன்படுத்தக்கூடாது, உள்ளே சமைக்கக்கூடாது, வெளியில் சமைத்து கொண்டு வந்து இங்கு வைத்து விற்பனை செய்யலாம் என்ற நிபந்தனையோடு கடைகள் விடப்பட்டது. இதனால் 3 அல்லது 4 உணவகங்கள் மட்டுமே பேருந்து நிலையத்தில் இருந்தது.

ஆனால் இப்போது பேருந்து முனையத்தில் உள்ள 50 கடைகளில் 40 க்கும் மேற்பட்ட கடைகள் உணவகங்களாக மாற்றப்பட்டுள்ளது, அனைவரும் கரண்டை பயன்படுத்தி பேருந்து முனையதிற்குள்ளேயே புகை பறக்க, ஆவி பறக்க தோசை, கொத்து பரோட்டா என போட்டு வருகின்றனர். இதனால் பேருந்து முனையத்தில் ஏசி இயக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து முனையதிற்குள் நிலைமை இப்படி என்றால் ….. பேருந்து நிறுத்தப்படும் இடங்களில் இருந்து பயணிகள் இறங்கி நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்துள்ள பெட்டிக்கடைகளில் தங்களது சரக்குகளை 100 மீட்டர் தூரத்திற்கு பாதையிலேயே போட்டு அடைத்து வைத்துள்ளனர். மேலும் கடையில் விற்பனை செய்யும் பொருட்களை நடைபாதையில் நடப்பவர்களுக்கு இடையூறாக வெளியே நீட்டிக் கொண்டு தொங்கவிட்டுள்ளனர் இதனால் சுமைகளுடன் பைகளை சுமந்து செல்லும் பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

பேருந்து முனையத்தில் வெளியூர் பேருந்துகள் உள்ளே சென்று நிறுத்தத்தில் நிற்கும் வழியில் கழிப்பறைக்கு அருகிலேயே சில டிபன் கடைகள் அமைக்கப்பட்டு துர்நாற்றத்துடன் பயணிகள் சாலையில் அமர்ந்து உணவருந்தும் நிலையும் உள்ளது.

விமான நிலையத்திற்கு இணையாக பேசப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாகவும் அங்கு பல லட்சம் செலவு செய்து கடைகள் எடுத்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.