கிராம சபை கூட்டத்தில் காந்தி, பாரதியார் வேடமிட்டு வந்த சிறுவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
திருச்சி, அக். 2 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொடங்குப்பட்டியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர். அங்கு வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை , சமூகநலத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர் காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி குத்து விளக்கேற்றிவைத்தார். இந்த கிராமசபையில் இரண்டு சிறுவர்கள் காந்தி மற்றும் பாரதியார் வேடங்களை அணிந்து வந்து கலந்து கொண்டனர். இதைப்பார்த்த ஆட்சியர் இருவரையும் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.
இதையடுத்து கலைஞர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கும், வீடு மராமத்து செய்ய தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கும் பணி ஆணைகளை வழங்கிய ஆட்சியர் தொடர்ந்து தூய்மைக்காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி வாழ்த்தினர். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களையும் வழங்கினார். இதனைத்தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி மற்றும் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் நம் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வலியுறுத்தும் வகையில் தூய்மை உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கிராமப்பொதுமக்கள் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, வருவாய் கோட்டாட்சியர் (ஸ்ரீரங்கம்) தெட்சிணாமூர்த்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) குமார், மணப்பாறை ஒன்றியக்குழுத்தலைவர் அமிர்தவள்ளி இராமசாமி, பொடங்குப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் கோகிலா மற்றும் வளர்ச்சித் துறை அலுவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.