வாக்குப்பதிவு பயிற்சிக்கு வந்த ஆசிரியர்கள் திடீர் சாலை மறியல்
திருச்சி, ஏப். 8 திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். ஆனால் கலந்துகொள்ள வருகை தந்த ஆசிரியர்களுக்கு காலை முதல் தண்ணீர், உணவு போன்ற அடிப்படை வசதிகளை முறையாக செய்து தரப்படாததாலும், பள்ளியில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததாலும் மிகவும் சிரமமடைந்த ஆசிரியர்கள் மணப்பாறை வட்டாட்சியரும் உதவி தேர்தல் அதிகாரியுமான தனலெட்சுமியிடம் முறையிட்டும் தேவையான வசதிகளை செய்துதரப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ஆசிரியர்கள் பள்ளியின் முன்பு மணப்பாறை – கோவில்பட்டி சாலையில் திரண்டனர். பின்னர் அடிப்படை வசதிகள் செய்யுது தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த மணப்பாறை வட்டாட்சியர் தனலெட்சுமியின் காரை முற்றுகையிட்டதுடன், அவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கெஞ்சியும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். 100 கிலோமீட்டருக்கும் அப்பால் இருந்து அதிகாலையிலேயே புறப்பட்டு வந்துள்ள தங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து செய்து தராதது மட்டுமல்லாமல் அதிகாரிகளிடம் முறையிட்டும் அலட்சியமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். பின்னர் ஒருவழியாக சமாதானம் செய்த அதிகாரிகள் உடனடியாக தேவையானவற்றை செய்துதருவதாக வாக்குறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டதைதை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வந்த ஆசிரியர்களின் அடிப்படை வசதிதிக்காக நடத்திய திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டதுடன், மணப்பாறை – கோவில்பட்டி சாலையில் போராட்டத்தால் அரை மணிநேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.