பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் : மக்கள் சக்தி இயக்கம் – தண்ணீர் அமைப்பு கோரிக்கை
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் – மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு கோரிக்கை.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக்பைகள், பிளாஸ்டிக்பூசப்பட்ட காகித தட்டுகள், உணவுப்பொருட்களை பொட்டலம் கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்தாள்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் உறிஞ்சி குழல்கள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் தமிழகத்தில் தடை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.
ஆனால் திருச்சி மாநகர பகுதியில் உள்ள ‘டாஸ்மாக்’ பார்களில், 40 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் தற்போதும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் தயக்கம் காட்டுகிறார்கள்.
அதுபோல் டீக்கடைகள், மளிகை கடைகள், காய்கறிகடைகளில் அரசால் தடைசெய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் தள்ளுவண்டி கடைகள், சாலையோர உணவகங்கள், மற்றும் சிறிய உணவகங்களில் ஒரு சில கடைகளில் மட்டுமே வாழை இலை பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான கடைகளில் சாப்பிடவும், பார்சல் கட்டவும் இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்களே பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் உணவகங்களில் சட்னி, சாம்பார் பார்சல் கட்டவும், டீக்கடைகளில் டீ, காபி போன்றவைபார்சல் கட்டவும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. மாநகராட்சி அதிகாரிகளும், உணவு பாதுகாப்பு துறையினரும் இவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பதாலேயே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கபடுகிறது.
அத்துடன், இவற்றை வாங்கிச் செல்லும் பொதுமக்கள் அவற்றை மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய் போன்றவற்றில் வீசிவிடுவதால்,மழைக்காலங்களில் சாக்கடை கால்வாய்களை இந்த பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்பைகள், பிளாஸ்டிக்தாள்கள் அடைத்துக்கொள்வதால் மழைநீர் சாலையில் செல்லும் நிலை பல இடங்களில் ஏற்படுகிறது.
எனவே அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.