புளியஞ்சோலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

0 13
Stalin trichy visit

திருச்சி, மே 14  புளியஞ்சோலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கோடை வெப்பத்தை தணிக்க குடும்பத்துடன் உற்சாக குளியல்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள இயற்கை எழில் கொஞ்சும் புளியஞ்சோலைசுற்றுலாத் தலம், தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு களைகட்டத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு திரண்டு வருவதால், இப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது குடும்பங்களுடன் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புளியஞ்சோலைக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான:  பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை
திருச்சி சேலம் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதிலிருந்து தற்காலிக நிவாரணம் தேடி வரும் சுற்றுலா பயணிகளுக்கு புளியஞ்சோலை ஒரு சிறந்த புகலிடமாக அமைந்துள்ளது. இங்குள்ள நீரோடைகளிலும், பாறைகளுக்கு இடையே ஆர்ப்பரித்து வரும் அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நீராடி மகிழ்கின்றனர்.

குறிப்பாக, பச்சைப்பசேல் என்ற இயற்கை சூழலும், குளிர்ந்த நீரோட்டமும் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. குடும்பத்துடன் வந்து சமைத்து உண்டு, நீரோடைகளில் விளையாடி பொழுதை கழிப்பது தங்களுக்கு பெரும் மனநிறைவைத் தருவதாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சி கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த தளம், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் குறைந்த செலவில் சுற்றிப் பார்க்க ஏற்ற இடமாக கருதப்படுகிறது. தனியார் கேளிக்கை விடுதிகளை விட, இயற்கையான சூழலில் நேரத்தை செலவிடுவது குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அப்பகுதியில் உள்ள சிறு வியாபாரிகளின் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை முடியும் வரை இந்த கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.