“திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பால பணிகளும் கடந்து வந்த பாதையும்”
திருச்சி மக்களின் மிக நீண்ட கால ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பதுதான்!
மிகவும் பழமையான-அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணியானது ஏழு வருடங்களுக்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. ரூ.81 கோடி திட்ட மதிப்பீட்டில் 2 கட்டங்களாக பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு தொடர்ந்து பாலப் பணிகள் பல தொய்வுகளுடன் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் சென்னை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவ நிலம் ஒப்படைக்கப்படாததால் இன்றளவும் பாலம் நிறைவடையாமல் உள்ளது.
இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்தின் முதல் கட்ட பணியில் சென்னை சாலை பகுதியில் பாலம் அமைக்க ராணுவத்திற்கு சொந்தமான 66 சென்ட் நிலம் தேவைப்பட்டது. இந்த நிலம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டால் தான் அந்த பகுதியில் பாலம் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய முடியும் என்ற நிலை இருந்த போது கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் ராணுவ நிலத்தை தருவதற்கு கொள்கை அளவில் பாதுகாப்பு துறை நிர்வாக ஒப்புதல் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இடம் மட்டும் இன்றி திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான சுமார் 325 ஏக்கர் நிலத்திற்கு பதிலாகவும் தமிழக அரசின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு இடம் வழங்கப்படவும் இருந்தது.
திருச்சி நிர்வாகம் சார்பாக தமிழக அரசு இதற்காக கோப்புகளை அனுப்பி மூன்று வருடமாக காத்திருந்து அரசாணை வராத சூழ்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி கலெக்டர் சிவராசு ராணுவ இடத்தை பெற டெல்லி பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து தற்போது 8 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் ஜங்ஷன் ரயில்வே மேம்பால பணிகள் குறித்து ராணுவ இடம் தேவை என்பதால் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இப்படி பல கட்டங்களாக, 8 ஆண்டுகளுக்கு பிறகு முடிவடையாமல் உள்ள ஜங்ஷன் மேம்பால கட்டுமான பணிகள் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதனை நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார். தொடர்ந்து மூன்று மாதங்களுக்குள் கட்டுமான பணிகள் நிறைவடையும் எனவும் கூறியுள்ளார்.
எதுவாக இருக்கும் விரைவில் பாலம் நிறைவுபெற்று போக்குவரத்து நெரிசல் குறைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.