“மகேஸ் மாமாவால தான் தங்கம் வென்றேன், ரொம்ப சந்தோசமா இருக்கு” – தெற்காசிய போட்டியில் தங்கம் வென்ற திருச்சி மாணவர்!

0 759
Stalin trichy visit

சொன்னதுபோலவே தங்கம் வென்று காட்டியிருக்கிறார் திருச்சியை சேர்ந்த மாணவர் சந்தோஷ்‌‌. தெற்காசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு இந்தியாவுக்காக பேட்மின்டன் போட்டியில் விளையாட தமிழகத்திலிருந்து அதுவும் திருச்சியிலிருந்து ஒரு மாணவர் தேர்வாகி செல்கிறார் என கடந்த சில நாட்களுக்கு முன்பாக “நிச்சயம் தங்கம் வெல்வேன்” என்ற கட்டுரை திருச்சி மெயில் இணையதளத்தில் வெளிவந்தது.

சொன்னதுபோலவே தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 7 நாடுகள் கலந்துகொண்ட போட்டியில் இறுதி போட்டியில் தங்கம் வென்று திருச்சிக்கும் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த ஈஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். திருச்சி தேசிய கல்லூரியில் பி.எஸ்.சி உடற்கல்வி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நேபாளத்தின் போக்ராவில் நடந்த சர்வதேச அளவிலான 7வது இந்தோ- நேபாள கிராமப்புற இளைஞர் விளையாட்டு போட்டியில் சீனியர் இரட்டையர் பேட்மிட்டன் போட்டியில் திருச்சியிலிருந்து சென்று தங்கப்பதக்கத்தை வென்று தெற்காசிய அளவிற்கும் தேர்வாகினார். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் பூடான் நாட்டில் நடைபெற உள்ள தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 1ஆம் தேதி அங்கு சென்றார். ‌ பூடான் நாட்டில் நடைபெறும் தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டு போட்டியில் இந்தியாவில் இருந்து 15 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து அதுவும் திருச்சியிலிருந்து சந்தோஷ் என்ற மாணவன் தேர்வாகி சென்றார். இந்த நிலையில் சந்தோஷ் தற்போது பேட்மிட்டன் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார்.


இதுகுறித்து சந்தோசை தொடர்பு கொண்டு பேசினோம்…. “ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏழு நாடுகள் இந்த பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்டனர். ஒரு புதுவித அனுபவமாக இருந்தது. பூடான் நாட்டில் மூன்று நாட்கள் தொடர்ந்து பேட்மிட்டன் போட்டியில் விளையாடினேன். இதில் 2வது சுற்றாக ஸ்ரீலங்காவுடனும், அடுத்த சுற்று பங்களாதேஷிலும், செமி பைனல் நேபாளத்துடனும் விளையாண்டு, இறுதியாக பூடான் நாட்டுடன் தற்போது தங்கம் வென்றேன்” என்றேன். ‌

இதற்கு “என்னுடைய மாமா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தான் காரணம். என் பயணத்திற்கான அத்தனை செலவுகளையும் ஏற்று என்னை ஊக்கப்படுத்தி வழியனுப்பி வைத்தார். அதேபோல வாளாடி கார்த்தி, பைலட் அசோக்ராஜா, எங்கள் தேசிய கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி, என்னுடைய பயிற்சியாளர் திருப்பூர் மோகன், மற்றும் திருச்சி ரோபோட்டிக், கரூர் HMK பாத்திமா ஜூவல்லர்ஸ் ஆகியோர் எனக்கு மிகவும் உதவி புரிந்து ஊக்கமளித்ததால் இந்த தங்கப்பதக்கத்தை என்னால் வெல்ல முடிந்தது, அடுத்ததாக காமன்வெல்த் போட்டி நடைபெற உள்ளதாக கூறியுள்ளனர். நிச்சயம் அதிலும் பங்கேற்று வெல்வேன்” என்றார்.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.