லால்குடி அருகே பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு

0 12
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 7 லால்குடி அருகே பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு – ஒரு உடலின் தலை மாயம்.

​திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ ஆதிகுடி கிராமத்தில், பயன்பாடற்ற கிணறு ஒன்றில் அழுகிய நிலையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரின் மகன் லியோ சகாயராஜ். இவருக்குச் சொந்தமான தோட்டம் கீழ ஆதிகுடி கிராமத்தில் உள்ளது.

இந்தத் தோட்டம் நீண்ட நாட்களாகப் பராமரிப்பின்றி புதர்கள் மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. இங்கு சுமார் 7 அடி அகலமும், 15 அடி ஆழமும் கொண்ட, பயன்பாட்டில் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. தற்போது இந்தக் கிணற்றில் 5 அடி ஆழத்திற்குத் தண்ணீர் உள்ளது.

​இந்நிலையில், அந்தக் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து கிராம மக்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கிணற்று தண்ணீரில் உடல் அழுகிய நிலையில் இரண்டு சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அளித்த தகவலின் பேரில் லால்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து.

லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன், கிணற்றில் மிதந்த இரண்டு அழுகிய உடல்களும் கயிறு கட்டி வெளியே எடுக்கப்பட்டன.

அவ்வாறு மீட்கப்பட்ட உடல்களைப் பரிசோதித்தபோது, அதில் ஒரு உடலில் தலை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

​இதனைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் தலையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, கைப்பற்றப்பட்ட உடல்கள் உடற்கூறாய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நாளை காலை ராட்சத மின்மோட்டார் கொண்டு வரப்பட்டு, கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதும் இறைக்கப்படும். அதன்பின் காணாமல் போன தலையைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து இரண்டு ஜோடி காலணிகள், ஒரு அரிவாள், ஓர் இரும்பு ராடு, ஒரு செல்போன் மற்றும் கைலி, டி-ஷர்ட் போன்ற துணிகளைப் போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன் சம்பவ இடத்திலிருந்த முக்கிய தடயங்கள் சேகரித்து.

​இச்சம்பவம் குறித்து லால்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர்கள் யார்? இது கொலையா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.