விஜய் எத்தனை தொகுதியிலே வேண்டுமானாலும் நிற்கலாம் : விராலிமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்விஜயபாஸ்கர் கிண்டல்
திருச்சி, மார்ச் 31 விஜய் எத்தனை தொகுதியிலே வேண்டுமானாலும் நிற்கலாம் – விராலிமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஜயபாஸ்கர் கிண்டல் :
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான டாக்டர் விஜயபாஸ்கர் தனது குடும்பத்துடன் குண்டூரில் உள்ள குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி தமிழகத் தேர்தல் கணம் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு கட்சியிலும் தங்களது வேட்பாளரை அறிவிப்பு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 4வது முறையாக களம் காணும் டாக்டர் விஜயபாஸ்கர் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். தொடர்ந்து விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு செல்லும் முன் தனது குலதெய்வ கோவிலான குண்டூரில் உள்ள வல்லாளக் கண்ட அய்யனார் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது,
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து சுமுகமாக பல்வேறு விஷயங்களை முடித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
இன்று காலை நாங்கள் அனைவரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் சமாதிக்கு சென்று வழிபாடு ஆசி பெற்றோம்.
தொடர்ந்து குண்டூரில் உள்ள குலதெய்வம் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவங்குகிறோம்.
கள நிலவரம் மக்களுடைய ஆதரவு அதிமுகவுக்கு சாதகமாக உள்ளது.
மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது உறுதி.
மக்களின் மன ஓட்டம், அலை அலையாக மாறி இன்னும் 20 நாட்களில் வீசுகின்ற போது திமுகவின் ஆட்சி அகற்றப்பட்டு அதிமுகவின் ஆட்சி அமையும் என்றார்.
விஜய் இரண்டு தொகுதிகளில் நிற்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு?
அவர் இரண்டு தொகுதிகளில் நிற்கிறார் என்று பார்க்கிறேன் என சிரித்தபடி பதில் அளித்தார்.
அவர் இரண்டு தொகுதிகளில் நிற்கலாம் அல்லது 20 தொகுதிகளில் கூட நிற்கலாம்.
அவர் ஏற்கனவே 234 தொகுதிகளில் நிற்கிறேன் என்று கூறியுள்ளாரே, அதை அவர் செய்திருக்கலாம்.
தவெகவிற்கும் திமுகவிற்கும் போட்டி என விஜய் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு?
கள நிலவரம் என்பது வேறு திரை நிலவரம் என்பது வேறு,
நீங்கள் திரை நிலவரத்தை கேள்வியாக எழுப்புகிறீர்கள், நான் கள நிலவரத்தை பதிலாக சொல்கின்றேன் என்றார்.