வீகெண்ட்னாலே சைக்கிளில் தான் ஆய்வு – திருச்சி மக்களின் மனதில் இடம் பிடித்த எஸ்பி..!
சில வருடங்களுக்கு முன்புவரை நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்த ஒரு பொருள் சைக்கிள். கிராமம், நகரம் வேறுபாடுகளின்றி, எல்லோரும் தினமும் சைக்கிளில்தான் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். சைக்கிளில் பயணம் செலவில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது.இப்போது மீண்டும் சைக்கிள் மீது இளம் தலைமுறையின் கவனம் திரும்பியிருக்கிறது.
சைக்கிள் பயண விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என அடிக்கடி சைக்கிள் பயணம் மேற்கொண்டு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டுதான் வருகின்றன.
அந்தவகையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். இதுவரை திருச்சி வந்தது முதற்கொண்டு சைக்கிள் விழிப்புணர்வுக்காக சுமார் 2000 கிலோ மீட்டரை கடந்து இருப்பார் என்று தான் கூற வேண்டும்…
வார இறுதி நாட்களில் திருச்சியின் புறநகர் காவல் நிலையங்களுக்கு சென்று அதிரடியாக ஆய்வுகள் மேற்கொள்வது, செல்லும் வழிகளில் உள்ள காவல் நிலையங்கள், சோதனை சாவடிகள் என அனைத்திலும் போலீசாரை சந்தித்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவது விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பணியையும் தாண்டி செயல்பட்டு காவல் துறையினர் மத்தியில் சுஜித்குமார் இடம்பிடித்துவிட்டார்…
சமீபத்தில் திருச்சியில் இருந்து சிறுகனூர் வரை சென்று அங்குள்ள காவல் நிலையங்கள், சமயபுரம் காவல் நிலையம், சோதனை சாவடிக்கு சென்று வந்துள்ளார். அதேபோல இரவு நேரங்களில் திருச்சியிலிருந்து பஞ்சப்பூர் வழியாக மணப்பாறை வையம்பட்டி வரை சுமார் 100க்கும் மேற்பட்ட கிலோமீட்டர்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து வார இறுதி நாளான இன்று திருச்சியில் இருந்து புத்தாநத்தம் வரை சைக்கிளிலேயே சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சுமார் 140 கிலோ மீட்டர்கள் சைக்கிளில் பயணித்துள்ளார்.
திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொள்வது வரும் வழியில் பொது மக்களை சந்திப்பது காவல்துறையினருக்கு அறிவுரை கூறுவது என திருச்சி மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்…..