எம்.ஐ.இ.டி கல்லூரியில் பெண்கள், குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம், நவல்பட்டு குண்டூர் எம்.ஐ.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் அந்தோணி ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தை நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடுப்புச் சட்டம்,குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் பெண்களுக்கான நலன் சார்ந்த சட்டங்களான குடும்ப வன்முறை சட்டம், வரதட்சனை தடுப்புச் சட்டம், பணித்தளத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த அரசு நலத் திட்டங்கள் குறித்து பேசினார். குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவராஜ் போதைப் பொருள் தடுப்பு, இணையவழி குற்றங்கள், குழந்தை கடத்தல் குறித்தும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் பிரியங்கா சட்ட விரோதமாக குழந்தை தத்தெடுத்தல், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வில் சமுதாயத்தின் பங்கு குறித்தும் சைல்டு லைன் 1098 பணியாளர் கல்பனா குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்பாடு, குழந்தை பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு குறித்து பேசினார்கள். நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தார்கள்.
