விலைவாசி உயர்வைக் கண்டித்து திருச்சியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, நவ. 17 விலைவாசி உயர்வைக் கண்டித்து திருச்சியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
SDPI கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) சார்பாக விலைவாசி உயர்வைக் கண்டித்து திருச்சி மார்க்கடை எம்ஜிஆர் சிலை அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் WIM-ன் மாநில பொதுச்செயலாளர் பானு கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டதாக குற்றம் சாட்டினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2,500 ரூபாய்க்கு வாங்கிய மளிகை பொருட்கள், இந்த ஆண்டு நவம்பர் மாதம் 4,000 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரிசி கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், ஏழை மக்கள் பயன்படுத்தும் பாமாயில் விலை 200 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதாகவும் கூறினார். வெங்காயம் விலை 116 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், இஞ்சி, பூண்டு, தக்காளி மற்றும் ஆவின் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
சம்பளம் மட்டும் உயரவில்லை, ஆனால் விலைவாசி மட்டும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அடிப்படை மக்கள் தான் பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.
மக்களிடம் கேட்டால் நல்ல அரிசி வாங்கி சாப்பிட முடியவில்லை, நல்ல காய்கறி வாங்கி சாப்பிட முடியவில்லை என கஷ்டப்படுவதாக தெரிவித்தார்.
மத்திய புள்ளியியல் துறை ஆய்வின் அடிப்படையில் தமிழக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து பொருட்களின் விலையையும் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது தொடர்ந்தால் இந்த போராட்டம் கடுமையாக வெடிக்கும் எனவும் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.