மணப்பாறை அருகே வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

0 20
Stalin trichy visit

திருச்சி, அக்.13 விலைவாசி உயர்ந்து போச்சு வேலை கொடுங்க சார் ….. என விபிஜி ராம்ஜி திட்ட தொழிலாளர்கள் கோரிக்கை.

மணப்பாறை அருகே வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

குடும்பத்தை காப்பாற்ற வேலை வேண்டும் என 75 வயது மூதாட்டியும் போராட்டத்தில் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அழககவுண்டம்பட்டியில் உள்ள கருப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விபிஜி ராம் ஜி திட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் விபிஜி ராம்ஜி திட்டத்தின்படி 125 நாட்களுக்கும் முழுமையான வேலை வழங்க வேண்டும். செய்த வேலைக்கு நிலுவையின்றி சம்பளம் வழங்க வேண்டும். வேலைக்கு வராத தொழிலாளர்களையும் பணிதள பொறுபாபாளர் பணிக்கு வந்ததாக பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபடுவதையும் தொழிலாளர்களை அங்குமிங்கும் அலைக்கழிப்பதையும் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பூர் ஊராட்சி பகுதிகளான கருத்தகோடங்கிப்பட்டி, மாதனூர், கல்கட்டியூர், காடைப்பிச்சம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், நிலுவையில் உள்ள ஊதியத்தை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அப்போது அதிகாரிகளிடம் போதிய மழையின்றி விவசாயமும் செய்யமுடியவில்லை, விவசாய வேலைகளும் இல்லை. போதிய வருமானமின்றி தவித்துவரும் நிலையில் அரிசி, பருப்பு, மளிகை பொருட்களின் விலைவாசி பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் எங்களுக்கு கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அரசு அறிவித்துள்ளவாறு புதிய திட்டத்தின்படி 125 நாட்கள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்‌. தொழிலாளர்களிடம் அதிகாரிகள் உறுதியளித்த படி வேலை வழங்காவிட்டால் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரளாகச் சென்று அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 75 வயதுள்ள மூதாட்டி ஒருவர் தனக்கு வேலை தரமறுக்கின்றனர் மண் வெட்டுவேன், அள்ளுவேன் மண் கூடை மட்டுமே தூக்கமாட்டேன். வயசாயிடுச்சுன்னு சொல்றாங்க. குடும்பத்தை காப்பாத்தனும் எனக்கு வேலை தரச்சொல்லுங்க என கூறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

 

Leave A Reply

Your email address will not be published.