தொட்டியம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, ஆக.19 திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே வெங்காய பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (60)கூலி தொழிலாளி.இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் மூத்த மகன் மலையாளம் (30) என்பவர் திருமணமாகாத நிலையில் சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார்.
மலையாளத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.நேற்று அப்பகுதியில் உள்ள பிடாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற நிலையில் மலையாளம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.விசேஷ நாளன்று கூட இப்படி மது குடிக்கலாமா என கேட்டு பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.
பின்னர் குடும்பத்தினர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர்.மலையாளம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். சாமி கும்பிட சென்ற குடும்பத்தினர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மலையாளம் வீட்டில் சேலையால் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார்.அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து கொண்டு சென்றுள்ளனர்.
மலையாளத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். மகன் இறப்பில் சந்தேகம் எதுவும் இல்லை என தெரிவித்து மணி தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.