குடியிருப்புவாசிகள் சாலை மறியல் : சமாதானம் செய்த அமைச்சர்

0 14
Stalin trichy visit

திருச்சி, ஆக.10  திருச்சி திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அங்கு சாலை அமைக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், “மாநகராட்சிக்கு நிலம் தேவைப்பட்டால் அங்குள்ள வீடுகளை அப்புறப்படுத்தலாம் அல்லது அவர்களுக்கே பட்டா வழங்கலாம்” எனத் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணன் சாலை அமைத்துக் கொள்வதற்காக, அங்குள்ள வீடுகளை 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகாலமாக வாழ்ந்த வீடுகளை 15 நாட்களில் காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள், இன்று திருவானைக்காவல் செக்போஸ்ட் அருகே சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது தற்செயலாக அவ்வழியே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது காரில் வந்துகொண்டிருந்தார். மக்களின் போராட்டத்தைக் கண்ட அவர், உடனடியாக தனது காரை விட்டு கீழே இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நேரடியாகச் சென்றார்.

பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்களையும் கேட்டறிந்த அமைச்சர் ரமேஷ், “இந்த விவகாரத்தில் அரசு உரிய ஆய்வு செய்து, மக்களுக்குச் சாதகமாக முறையான நடவடிக்கை எடுக்கும்” என உறுதியளித்தார்.  இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.