மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில விவகாரம் : 19 பேர் மீது எஃப்.ஐ.ஆர்.பதிவு : அமைச்சர் ரமேஷ் பேட்டி

0 16
Stalin trichy visit

திருச்சி, ஆக.10  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில விவகாரம் – புகார் பெறப்பட்ட 10 நாட்களுக்குள் 19 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது மற்றும் விசாரணை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தவறு நடப்பது தெரியவந்தால் அரசு ஒருபோதும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதில்லை – அமைச்சர் ரமேஷ் பேட்டி.

பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலின், கிழக்கு நுழைவாயிலில் உள்ள தாமோதர கிருஷ்ணன் கோவில் கோபுரத்தின் ஒரு பகுதி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து கோபுரத்தின் பழமை மாறாமல் சிற்ப வல்லுநா்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் கொண்ட குழுவின் வழிகாட்டுதலின் படி நுழைவாயில் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நுழைவாயில் கோபுரத்தின் சீரமைப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து நேற்று  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நுழைவாயில் கோபுரத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதிக் தாயள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:–

முதல்வர் விஜய்யின் ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களில் தொடங்கப்பட்ட சில திருப்பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தது. நம்முடைய ஆட்சி அமைந்த பிறகு உடனடியாக அந்த பணிகளை எல்லாம் தீவிரமாக துரிதப்படுத்தி தகுந்த காலகட்டத்தில் முடிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அனைத்து பணிகளும் சிறந்த முறையில் வேகமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள 21 கோபுரங்களில் ஒன்றான ஸ்ரீ தாமோதர கிருஷ்ண கோபுரத்தின் பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் தாமதமானது. பாதசாரிகள் நடந்து செல்லும் பாதை மூடப்பட்டிருப்பதால் பொதுமக்கள் சிரமப்படுவதாக விடுத்த கோரிக்கையை ஏற்று, துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் ஒருங்கிணைப்போடு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. உபயதாரரின் முழு ஒத்துழைப்போடு கோபுரப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அந்தப் பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

முன்னோர்கள் கோயில்களில் கர்ம காரியங்கள் மற்றும் அறப்பணிகளுக்காக எழுதி வைத்த சொத்துக்களை, காலப்போக்கில் நோக்கங்களை மறைத்து நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் நிர்வாக ரீதியாகப் பதிவு செய்யும் முயற்சிகள் துறை வசம் கவனத்திற்கு வந்துள்ளன.

பழனி விவகாரத்தில் நீதிமன்றத்தை ஏமாற்றி ஆவணங்கள் பெறப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றமே அதைக் குறிப்பிட்டுள்ள நிலையில், உடனுக்குடன் அப்பீல் செய்வது மற்றும் காவல் துறையில் புகார் அளிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விவகாரத்தில் அறக்கட்டளை சொத்துக்களை தனி நபர்களுக்குப் பவர் மாற்றம் செய்ய முயன்ற வழக்கில், புகார் பெறப்பட்ட 10 நாட்களுக்குள் 19 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது மற்றும் விசாரணை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தவறு நடப்பது தெரியவந்தால் அரசு ஒருபோதும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதில்லை.

வரும் பட்ஜெட் கூட்டத் தடரில் எத்தனை கோயில்களில் திருப்பணிகள் நடைபெற உள்ளது, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பு வெளியிடப்படும்
.
ஸ்ரீரங்கம் அடிமடை பிரச்சனையில் சட்ட போராட்டம் உள்ளது. முழுவதுமாக சட்ட வல்லுநர்கள் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டு நல்ல முன்னெடுப்புகள் எடுக்கப்படும்.

நீதிமன்ற உத்தரவின்படி, கோயில்களின் கருவறைக்குள் செல்போன் மற்றும் வீடியோ பதிவு செய்வதைத் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக முக்கியக் கோயில்களில் வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் பாதுகாப்பான செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்துவது முழுமையாகத் தடை செய்யப்படும்.
பக்தர்கள் ஆன்மீக சிந்தனையோடு தரிசனம் செய்ய வசதியாக, மீடியா நண்பர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோயிலுக்கு வெளியே எங்கு வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம் என்றும், கோயிலுக்குள்ளும் கருவறைக்கு அருகிலும் பதிவுகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோயில்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் புகார்களின் மீது சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.