சிறப்பு செய்தி – மாணவர் சேர்க்கையில் முன்னுதாரணமாய் செயல்படும் எடமலைப்பட்டி புதூர் அரசு தொடக்கப்பள்ளி- யார் இந்த மருதநாயகம்?

0 685
Stalin trichy visit

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். எத்தனையோ சாதனையாளர்களையும், அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்கள் என உயர்பதவியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பெற்றோருக்கு அடுத்த கட்டத்தில் குருவாக இருந்து வாழ்க்கையை வளமாக்கியவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது! மக்களின் அறியாமையை நீக்குவதால்தான் ஆசிரியப்பணியே அறப்பணி, அதற்கே தன்னை அர்ப்பணி , இப்பணி தியாகப்பணி, தெய்வீகப் பணி, சமூகப் பணி என்று எல்லோராலும் சிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற கருத்தை மனதில் கொண்டு பணியாற்றுகின்றனர். இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்திலும் தங்கள் உயிரை துச்சமென நினைத்து பணியாற்றிவரும் நல்லுள்ளங்கள் எத்தனையோ பேர் இருந்து வருகிறார்கள்!

 

தமிழகத்திலேயே மாணவர் சேர்க்கையில் முன்னுதாரணமாய் செயல்பட்டு வரும் மணிகண்டம் ஒன்றியத்தின் கதை இது!
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 73 தொடக்கப் பள்ளிகள் உள்ளது. இதில் 50 அரசு பள்ளிகளும், 23 அரசு உதவிபெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட கடந்த 3 ஆண்டுகளாக முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை தொடர்ந்து மாணவர் எண்ணிக்கையானது அரசு பள்ளிகளில் கூடி வருவது என்பது வியக்கத்தக்க ஒன்று. தங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படித்தால் தான் கௌரவம்  எனக் கருதும் பெற்றோர்கள் மத்தியில் அரசு பள்ளியை தரத்திலும், கல்வியிலும் முன்னுதாரணமாய் கொண்டு வந்ததற்கு இவரின் பணி அளப்பரியது!

எளிமையான தோற்றம், தன்னுடைய பழைய இருசக்கர வாகனத்தில் மணிகண்டம் ஒன்றிய உட்பட்ட பகுதிகளுக்கு வலம் வருபவர், மணிகண்டம் பகுதி குழந்தைகளின் ஹீரோவாக செயல்படுபவர், அரசு சம்பளம் வாங்கினாலும் கூட அதை எதையுமே பார்க்காமல் அனைத்து மக்களுடன் சகஜமாக பழகி அவர்களின் மனதில் இடம் பிடிப்பவர், மணிகண்டம் ஒன்றியத்தில் மாணவர் சேர்க்கைக்கும் இவரும் ஒரு தவிர்க்க முடியாத காரணம்தான். “மருதநாயகம்” மணிகண்டம் ஒன்றியத்தில் வட்டார கல்வி அலுவலராக செயல்பட்டு வருபவர்.

திருச்சி மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடமலைப்பட்டி புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் மூன்று ஆண்டுகளாக மாணவர் சேர்க்கையானது மூன்றே நாட்களில் 100 நபர்களை தாண்டி செல்கிறது. இது சாதாரண விஷயமல்ல… அதுவும் ஒரு அரசு பள்ளியாக இருந்து இடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தில் மாணவர்கள் குவிந்து வருகிறார்கள் என்றால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எப்படி பணியாற்றி இருப்பார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய நேரம் இது!

இது குறித்து மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகத்திடம் பேசினோம்‌…. “அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே செல்கிறது என்பார்கள். ஆனால் மணிகண்டம் ஒன்றியத்தை பொறுத்தவரை மாணவர்களின் சேர்க்கையானது மூன்று ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. எங்கள் ஒன்றியத்தில் ஆசிரியர் தேவையும் அதிகமாக இருக்கிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடமும் பேசியுள்ளோம். எங்கள் ஒன்றியத்தில் படிக்கும் குழந்தைகளின் கல்வி மட்டும் நாங்கள் பார்ப்பதில்லை, மாறாக கல்வியோடு சேர்த்து மாணவர்களுடைய தனித்திறமை அனைத்தையும் வெளிக்கொண்டு வந்து அதனை செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் வரவைத்து அவர்களுடைய பெற்றோர்களிடமும் அதனை கொண்டு போய் சேர்க்கிறோம். குறிப்பாக இந்த இடமலைப்பட்டி புதூர் அரசு பள்ளியில் விளையாட்டுக்கு என்று தனி சீருடையும், பெற்றோர்களிடம் மாணவர் சேர்க்கை ஒன்றை மட்டும் தான் எதிர்பார்க்கிறோம், அதனைத் தவிர அனைத்தையும் நாங்களே நிதி உதவிகளைப் பெற்று மாணவர்களுக்கு இலவசமாக செய்து தருகிறோம். எழுத்து பயிற்சிக்காக தனியாக ஆசிரியர் நியமித்து ஒரு மாதகாலம் மாணவர்களுக்கு எழுத்தது பயிற்சி அளிக்கிறோம். இதனால் மாணவர்களின் எழுத்தானது சிறுவயதிலேயே செம்மைப்படுத்த முடிகிறது” என்றார்.
மேலும் அவர் “முதல் வகுப்பில் சேரும் மாணவர்களை மாலை போட்டு ஊர்வலமாக மேளதாளத்துடன் பள்ளிக்கு அழைத்து வருவோம். 2017ம் ஆண்டு 120 பிள்ளைகள் இருந்த இந்த அரசு பள்ளியில் இன்று 600 முதல் 700 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.கொரோனா காரணமாக தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் அரசுப் பள்ளியினை நாடினால்  அவர்களை அட்மிஷன் கொடுத்து அதற்கான வழிமுறைகளையும் நாங்களே செய்து கொள்கிறோம். இடமலைப்பட்டி புதூர் பள்ளியை பொருத்தவரை பள்ளி கட்டிடத்தை தாண்டியும் பல மாணவர்கள் தொடர்ந்து சேர்க்கை புரிந்து வருகின்றனர். இதற்காக கூடுதலாக ஆசிரியரையும் பள்ளி கட்டிடத்தையும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதேபோல மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி பள்ளிகளிலும் தொடர்ந்து மாணவர் சேர்க்கையானது கூடி வருகிறது” என்றார்
“சார், எப்போதுமே பழைய வண்டியில் ஒரு எளிமையான தோற்றத்தில் வருகிறீர்களே சென்டிமென்ட்டா” என்ற கேள்விக்கு…. புன்னகையுடன் பதில் அளித்தார்… நாம் எளிமையாக இருந்தால் தான் மாணவர்கள் நம்மை அணுகுவார்கள். நான் இதே ஒரு காரில் சென்று இறங்கினால் கண்டிப்பாக மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் ஒரு நல்ல எண்ணம் எழாது. சாலையில் ஒரு குழந்தைகள் நின்றாலும் கூட நான் அவர்களை என்ன, ஏது என்று விசாரிப்பேன். அதுபோல சாலையில் நின்ற பல குழந்தைகள் இன்று பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இன்றளவும் நான் மோதிரம், செயின் எதுவுமே அணிந்ததில்லை அரசு கொடுக்கும் சம்பளத்தில் கண்டிப்பாக பிள்ளைகளுக்காக பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்”என்றார்

தமிழகத்தில் உள்ள பல ஒன்றியங்களில் இதுபோல “மருதநாயகங்கள்” அமைந்துவிட்டால் மாணவர் சேர்க்கையானது கூடி வரும் என்பதே நிதர்சனம்…..

Leave A Reply

Your email address will not be published.