வாலிபரை கத்தியால் குத்தி மோட்டார் சைக்கிளை பறித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

0 15
Stalin trichy visit

திருச்சி, ஆக.20- வாலிபரை கத்தியால் குத்தி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாயகர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 25). இவர் கடந்த 1-1-2025 அன்று இரவு 7.30 மணி அளவில் தனது தோழியை வீட்டில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். கொள்ளிடம் பாலத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 2 பேர் ஸ்ரீதரனை கத்தியால் குத்தி அவரது மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர். இது பற்றி ஸ்ரீதரன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி மற்றும் ஆதாயத்திற்கான கொள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் ஸ்ரீதரனை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றது திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த ஆசைமுத்து (27) மற்றும் அவரது நண்பர் ரெங்கநாதன் (30) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆசைமுத்துவையும், ரெங்கநாதனையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் திருச்சி இரண்டாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. போலீசார் தரப்பில் அரசு வக்கீல் எஸ்.எழிலரசி ஆஜராகி வாதாடினார். குற்றம் சாட்டப்பட்ட ரெங்கநாதன் ஏற்கனவே இறந்து விட்டதால் ஆசைமுத்துவிற்கு மட்டும் 10 வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.கோபிநாதன் தீர்ப்பு அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.