13 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு : சிறையில் இருந்து வெளியே வந்த பி.ஆர்.பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு
திருச்சி, டிச.22 பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு – சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்
ONGC சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்ந்து பி.ஆர் பாண்டியன் திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார் தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்
காவிரி டெல்டா பகுதியில் ONGC நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக ஆழ்துணை கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2015 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் கரிய மங்கலத்தில் தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் P.R.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ONGC சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட 24 பேர் மீது காவலத்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் அமர்வு நீதிமன்றம், பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜுக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 22 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பி.ஆர்.பாண்டியன் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது
இந்த மனு, கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விவசாயி என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 13 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதாக கூறினார். 22 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இருவர் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனையடுத்து, பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த PR பாண்டியன் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தார் அவருக்கு விவசாயிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன்,
ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய போது எந்தவித பொருட்களும் சேதப்படுத்தப்படவில்லை. ஒப்பந்ததாரர்களுக்கு பின்னால் ஓஎன்ஜிசி நிர்வாகம் இருந்து கொண்டு காவல்துறையை பயன்படுத்தி எங்கள் மீது பொய் வழக்கு போட்டார்கள்.
காவேரி டெல்டா பகுதியில் பேரழிவு திட்டங்களை அனுமதிக்க கூடாது என கூறி ஓஎன்ஜிசிக்கு எதிராக தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தோம் அதை விசாரித்த தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு தடைவிதித்தது. இதை எதிர்கொள்ள முடியாமல் அந்த நிறுவனம் நான் 100 கோடி கேட்டு அவர்களை மிரட்டியதாக பொய் வழக்கு தொடர்ந்தார்கள்.அதற்கு ஆதாரம் தரும் வரை ஓஎன்ஜிசி மீதான தடையை நீக்க முடியாது என நீதிபதி தெரிவித்துவிட்டார். அதன் பின் அந்த வழக்கை ஓஎன்ஜிசி திரும்பப்பெற்றது பின்னர்தான் ஓஎன்ஜிசி மீதான தடை நீக்கப்பட்டது.
ஓஎன்ஜிசிக்கு எதிராக தொடர்ந்து போராடியதால் என்னை சிறைக்கு அனுப்ப வேண்டும் என ஓஎன்ஜிசி தீவிரமாக செயல்பட்டு எனக்கு தண்டனை பெற்று தந்தார்கள்.
அந்த தீர்ப்பை மதித்து நாங்கள் சிறைக்கு சென்றோம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம் பல்வேறு விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் எனக்காக களத்தில் இறங்கி போராடினார்கள். நீதிமன்றம் எங்களுக்கு பிணை வழங்கியுள்ளது.
எங்களுக்காக போராடிய விவசாயிகள், அரசியல் கட்சியினர் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தண்டனை எங்கள் இருவருக்கு மட்டும் விதிக்கப்பட்ட தண்டனை அல்ல ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் விதிக்கப்பட்ட தண்டனை, காவிரி டெல்டாவை அபகரிக்க முயலும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான தண்டனை.
இந்த தண்டனைக்கு யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை தண்டனை எதிர்த்து நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம் அரசும் எங்களுக்கு பிணை வழங்க எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து போராடினார்கள்.
விவசாயிகளை உரிமையை நிலைநாட்ட சிறை மட்டுமல்ல உயிரை விடவும் தயாராக இருக்கிறோம். இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக எந்த கட்சியும் குற்றம் சாட்ட நான் விரும்பவில்லை என்றார்.
அடுத்து பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயிகளுக்கு போராட உரிமை உள்ளது. தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் முதலமைச்சர் ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.