லால்குடி அருகே தடைசெய்யப்பட்ட 1981 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: இரண்டு பேர் கைது
திருச்சி, பிப். 20 திருச்சி மாவட்டத்தில் போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு உரிய நடவடிக்கைகளை மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் மேற்கொண்டு வருகிறார்.
இதனையடுத்து லால்குடி சுற்றுவட்டாக பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மாவட்ட எஸ்பி தனி பிரிவு போலீசார் கல்லக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மால்வாய் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்று சோதனை செய்தனர்.
இந்நிலையில் புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் வடக்கு தெருவை சேர்ந்த மணிவேல் (வயது 45) என்பவரின் பெட்டிக்கடையை சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 110 கிலோ ஹான்ஸ் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மணிவேலை கல்லக்குடி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அரியலூர் மாவட்டம் செந்துறை ராயபுரம் சின்ன ஆனந்தவாடி மெயின் ரோட்டை சேர்ந்த முருகேசன் (வயது 49) என்பவரிடம் இருந்து வாங்கியதாக கொடுத்த தகவலின் பேரில் சிவகுமார் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் சுமார் 1871 கிலோ எடை கொண்ட புகையிலை, குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து மணிவேல் முருகேசனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.