காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்
திருச்சி, ஜூலை 1 திருச்சி கண்டோன்மெண்ட் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக கண்டோன்மெண்ட் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விபசார தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
சோதனையில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அந்த மசாஜ் சென்டரின் மேலாளர் விவேக் கைது செய்யப்பட்டதுடன், அங்கிருந்த 3 பெண்களும் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் ஏற்கனவே அந்த மசாஜ் சென்டர் மீது அங்கு விபசாரம் நடைபெறுவதாக புகார் எழுந்து இருந்தது.
இந்த நிலையில் பாலியல் தொழிலை தடுக்க விபசார தடுப்பு பிரிவு காவல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றிய வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாலசரஸ்வதி, ராஜ்மோகன் மற்றும் காவல்துறை வாகன ஓட்டுநர் அத்தாலி உள்ளிட்ட 3 பேரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.