பூவாளூரில் மின்சாரம் தாக்கி உயிர்பெற்ற சிறுமி சிகிச்சை பலனின்றி சாவு

0 313
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளுர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகள் 12 வயதான தீபிகா. இவர் கடந்த 6ந் தேதி அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது மழைநீர் தேங்கியிருந்த தண்ணீரில் காலை வைத்துள்ளார். அப்போது மின்கம்ப எர்த் வயர் வழியாக மின்கசிவு ஏற்பட்டு அந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால் சிறுமி தீபிகாவை மின்சாரம் தாக்கியது.

அக்கம் பக்கத்தினர் அவரை மரக்கட்டை உதவியுடன் சிறுமியை அப்புறப்படுத்தி பார்த்த போது நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தது. உடனே சிறுமியை தூக்கிக்கொண்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அரசு டாக்டர் சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுமியின் நெஞ்சை கடுமையாக அமுக்கி சுவாசம் கொடுக்க முயற்சித்துள்ளனர்.

ஆனாலும் சிறுமி சலனமற்று கிடந்ததால், ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்க முடிவு செய்தனர். டிஃபிபிரிலேட்டர் (Defibrillator) கருவியின் உதவியுடன் ஷாக் கொடுக்கப்பட்டது. ஆச்சர்யப்பட தக்க வகையில் சிறுமி மூச்சு விட ஆரம்பித்துள்ளார். இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் அவருக்கு மூக்கு வழியாக நுரையீரல் ஆக்சிஜன் கொடுத்து ஓரளவு சுவாசத்தை சீராக்கினார் மயக்கவியல் மருத்துவர் பிரபாகரன்.

அதனை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் நின்றுப்போன இதயத்தை துடிக்க வைத்த லால்குடி அரசு மருத்துவர்கள் மேல் சிகிச்சை பலனில்லாமல் சிறுமி உயிரிழந்தது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.