108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், ஆழ்வார்கள் பதின்மரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், பூலோக வைகுண்டமுமான இத்திருத்தலத்துக்கு ஆதிபிரம்மோற்சவம் ஏற்பட்டவரலாறு இதுவே. ஸ்ரீவிபீஷணாழ்வார் ஸ்ரீரங்க விமானத்தை அயோத்தியிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லுகையில் சந்திரபுஷ்கரணி கரையில் இறக்கி வைத்தார். உறையூரில் அப்பொழுது அரசனாயிருந்த தர்மவர்மா மறுநாள் பிரம்மா ஏற்படுத்திய உற்சவம் நடத்த வேண்டிய தினமாக இருந்ததால்,
தர்மவர்மா கோரிக்கையை ஏற்று விபீஷணாழ்வார் இந்த பிரம்மோற்சவத்தை நடத்த அனுமதித்தார் என ஸ்ரீரங்க மஹாத்மியத்திலும், லக்ஷமி காவியத்திலும் காணப்படுகிறது. பங்குனி ரோகிணி நட்சத்திரத்தில் கொடியேற்றம் செய்து பதினொன்று நாட்கள் இந்த உற்சவம் சிறப்புற நடைபெற உள்ளது. நாளை 10.03.2022 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இவ்விழாவில்
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அரங்கன் அருள் பெருக. இதில் வருகிற 15ந் தேதி உறையூர் ஸ்ரீகமலவல்லி நாச்சியார்- ஸ்ரீ நம்பெருமாள் சேர்த்தி சேவை, 18ந் தேதி ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாயகி தாயார் -ஸ்ரீ நம்பெருமாள் சேர்த்திசெய்தி, 19ந் தேதி கோரதம் (பங்குனித் தேர்) ஆகியவை நடைபெறுகிறது.