புதிதாக குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், கும்பக்குடி ஊராட்சி, அண்ணாநகர் பகுதி 2. இங்கு 4-வதுவார்டு பகுதியில் 300 வீடுகளும், 5-வது வார்டில் 325 வீடுகளும், 6-வது வார்டு பகுதியில் 300 வீடுகள் உள்பட மொத்தம் 925 வீடுகள் இருக் கின்றன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு கடந்த 20 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட 3 லட்சம் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. தற்பொழுது உள்ள வாட்டர் டேங்க் பழுதடைந்து பராமரிப்பின்றி உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் நலச்சங்கத்தினர் கூறுகையில் தற்பொழுது இயங்கி வரும் வாட்டர் டேங்க் பழுதடைந்துள்ளது இதனை முறையாகப் பராமரித்து சரி செய்வதுடன் கூடுதலாக எங்களுக்கு புதிய வாட்டர் டேங்க் கட்டித்தர வேண்டும். மேலும் புதிய தார்சாலை, பாதாள சாக்கடை பராமரிப்பு, குழந்தைகள் விளையாட பூங்கா வசதி ஆகியவை செய்து தர வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.