மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்கள்..
மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி….
திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 3,640 இடங்களில் நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி திருச்சி மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட 22 லட்சத்து 84 ஆயிரத்து 821 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 19 லட்சத்து 76 ஆயிரத்து 583 பேர் இரு தவணை தடுப்பூசியும், அவர்களில் 40 ஆயிரத்து 347 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 95.39 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 83.60 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். இந்த வாரம் 31-வது சுற்றாக இன்று (ஜுலை 10) கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடைபெற்றது. அதன்படி திருச்சி மாநகரில் 1,200 இடங்களிலும், புறநகரில் 2 ஆயிரத்து 440 இடங்களிலும் என மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 640 இடங்களில் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டனர். அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புக் துறை இயக்குநர் டாக்டர்.தி.செல்வவிநாயகம், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், கே.என்.சேகரன், மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.