ஆசிரியையிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு….
கல்லக்குடியை அடுத்த டி.கல்விக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முரசொலி. இவர் பால்பண்ணை வைத்துள்ளார். இவரது மனைவி சசிகலா ( வயது 40). இவர் கோமாகுடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பள்ளி முடிந்து மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஆலங்குடி மகாஜனம் கிராமத்தை அடுத்து தூங்குமூஞ்சிமரம் அருகே வந்தபோது, திடீரென்று மொபட் பெட்ரோல் இன்றி நின்றது. இதனையடுத்து அவர் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை மொபட்டில் ஊற்றினார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சங்கிலியை இறுகபிடித்துக்கொண்டார். இதில் சங்கிலி அறுந்து 3 பவுன் மர்ம ஆசாமிகளின் கையில் சிக்கியது. இதனிடையே அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வருகின்றனர்.