இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு- காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

0 318
Stalin trichy visit

மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தை அடுத்துள்ள வடக்கி பண்ணையை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 45). இவர் நேற்று முன்தினம் சமயபுரம் சென்றபோது, டீ குடிப்பதற்காக கடைவீதி அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதேபோல், மண்ணச்சநல்லூரை அடுத்த கல்பாளையம் அருகே உள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்த அப்துல் அலி, அப்பகுதியில் உள்ள ஒரு மில் அருகே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். புதூர் உத்தமனூரை சேர்ந்த இதயத்துல்லா(54), சமயபுரம் இந்திரா காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்த்தபோது, முககவசம் அணிந்த ஒரு மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை பிடிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட 3 பேரும் தனித்தனியே சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசாருக்கே சவால் விடும் வகையில் தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் நடப்பதை தடுக்க, போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.