சத்திரம் பேருந்து நிலையத்தில் நேரம் காட்டும் கால அட்டவணை பொருத்த பயணிகள் கோரிக்கை
திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் பொலியுறு நகர திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 2019 – ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 19-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பல்வேறு கிராமங்களுக்குச் செல்லக்கூடிய அரசு பேருந்து (டவுன் பஸ்) மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு வழித்தடத்திலும் வழித்தடப் பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்தந்த பேருந்துகள் அந்தந்த வழித்தடங்களுக்குச் செல்வதற்கான “நேரம் காட்டும் கால அட்டவணை” குறித்து அங்கு தகவல் பலகை பொருத்தப்படவில்லை. இதனால் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து வரும் பயணிகள் மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதும், அதிகநேரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகின்றது. இதனால் பலபல சூழ்நிலைக் குற்றங்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது.
அருள் கூர்ந்து அய்யா அவர்கள் புதிதாக சீரமைத்து கட்டப்பட்டுள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் அனைத்து வழித்தடங்களிலும் செல்லும் பேருந்துகளின் “நேரம் காட்டும் கால அட்டவணை” குறித்த தகவல் பலகை பொருத்தி பேருந்து பயணிகளின் நலன் காக்க வேண்டுகிறோம்.