இளைஞர் கொடூர கொலை: திருநங்கை அதிரடி கைது

0 418
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சீதாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் பாஸ்கர் (வயது 29). விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றி வந்தார். திருமண வயதை எட்டிய அவருக்கு பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பணி முடிந்து வழக்கமான நேரத்திற்கு அவர் வீடு திரும்பவில்லை. அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் விசாரித்தபோது, பணி முடிந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பதட்டம் அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கே.கே.நகரை அடுத்த கிருஷ்ணமூர்த்தி நகர் ராணுவ மைதானம் அருகில் பாஸ்கர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் தலை கல்லால் மோதியும், உடல் முழுவதும் கடுமையாக தாக்கப்பட்டதற்கான காயங்களும் இருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கே.கே.நகர் போலீசார் அங்கு விரைந்து சென்று பாஸ்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது கொலை சம்பவம் நடந்த பகுதியில் அதிக அளவில் திருநங்கைகள் நடமாட்டம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த 6-ந்தேதி பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் பாஸ்கர் திருநங்கைகளை சந்தித்துள்ளார். அதில் ஒருவர் திருநங்கை என்று தெரியாமல் பழகியதாகவும், அதன் பிறகே உண்மை நிலை தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் பாஸ்கருக்கும், அந்த திருநங்கைக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. பின்னர் அவரிடம் இருந்து விடுபட்டு பாஸ்கர் வீட்டிற்கு புறப்பட்டபோது, அவருடன் கூட்டு சேர்ந்த மேலும் திருநங்கைகள் மூலம் பாஸ்கர் கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்டதும் உறுதியானது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட கே.கே.நகர் போலீசார் திருச்சி நகரில் தலைமறைவாக இருக்கும் திருநங்கைகள் குறித்து பட்டியல் தயாரித்தனர். அப்போது ஒருவர் கடந்த 7-ந்தேதி முதல் திருச்சியை விட்டு வெளியூர் சென்றிருப்பதும், மீண்டும் அவர் திரும்பாமல் இருப்பதும் தெரிந்தது. அவர் குறித்து விசாரித்ததில் பாஸ்கரை கொலை செய்தது திருநங்கை வைஷ்ணவி என்று தெரியவந்தது. இதையடுத்து பெங்களூருவில் அவர் பதுங்கி இருந்ததாகவும் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார் திருநங்கை வைஷ்ணவியை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் அந்த திருநங்கை காஜா நகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. மேலும் அவரிடம் நடத்தப்படும் தொடர் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.