திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் லாரி மோதி விபத்து

0 282
Stalin trichy visit

திருச்சி, அக். 22 திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவர் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சி, புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து காய்கறி லோடு ஏற்றிச்சென்ற லாரியை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு திருச்சி விமான நிலையம் அருகே வந்த கொண்டிருந்த போது முன்னே சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, திருச்சி விமான நிலைய சுற்றுச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. சுற்றுச் சுவர் இடிந்து சுவருக்கு அருகே இருந்த சிக்னல் மீது மோதியதில் அதன் கருவிகள் முழுவதுமாக சேதமடைந்தன. உடனடியாக இந்த விபத்து குறித்து விமான நிலைய காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் விமான நிலைய பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து விபத்து குறித்து லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விமான நிலையப் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதன் காரணமாக திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சிலமணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு தற்போது சீராக இயங்கி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.