வீட்டை அடித்து நொறுக்கிய 2 பேர் கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குமரக்குடி கிராமத்தில் உள்ள குடித்தெருவை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 26-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் 3 வது வார பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஒரு சரக்கு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து ஊர்வலமாக சென்றனர். அப்போது, அதே பகுதியில் கீழத் தெருவை சேர்ந்த சிலர் மோட்டார் பைக்குகளில் வந்துள்ளனர். அப்போது ஊர்வலமாகச் சென்றவர்களுக்கும் மோட்டார் பைக்குகளில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதமாகி மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. இந்நிலையில் கடந்த 28 ந்தேதி கீழத்தெருவை சேர்ந்த சிலர் குடித்தெருவில் வசிக்கும் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி அங்குள்ள வீட்டை உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குடித்தெரு மக்கள் 28 ந்தேதி இரவு மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். மேலும் வீட்டை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சி துறையூர் செல்லும் சாலையில் உள்ள மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வீட்டை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான முருகானந்தம்,19 வயதான புகழேந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் இருவரையும் கைது செய்து திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.