செல்லியம்மன் கோவிலில் பங்குனி தேரோட்ட விழா
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ஊட்டத்தூரில் உள்ள அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் பங்குனி தேரோட்ட விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.ஊட்டத்தூரில் உள்ள அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 21ம் தேதி முதலாம் மண்டகப் படியுடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அய்யனார் காப்பு கட்டுதல்,குடியழைப்பு அம்மன் திருவிழா நடைபெற்றது. தேரோட்ட விழாவை முன்னிட்டு கிளி, ரிஷப, சிம்ம, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் தினமும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.கடந்த 4 ம் தேதி முள் படுகளம் நிகழ்ச்சியும்,தெருப்பொங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் முக்கிய விதிகள் வலம் வந்து நிலையை அடைந்தது.
இதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நாளை விடையாற்றி நிகழ்ச்சியும் வருகின்ற 10ம் தேதி விடையாற்றி உத்திரகாப்பு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் சிதம்பரம் தலைமையில் கோயில் ஆய்வர் தீபா தேவி கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்து இருந்தனர். சிறுகனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.