புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர்கள்…

0 385
Stalin trichy visit

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  ஆகியோர் இன்று  திருச்சிராப்பள்ளி மக்கள் மன்றத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள “தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியினை” திறந்து வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்கள்.

“ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படுகின்றது. அதனடிப்படையில் இன்று துவங்கியுள்ள இந்த கண்காட்சியானது 18.04.2023 வரை நடத்தப்படவுள்ளது.

இந்த புகைப்பட கண்காட்சியில்  தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய அரசுத் திட்டங்களின் தொகுப்பும்,  அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட அரசு விழாக்கள் குறித்த புகைப்படங்களும் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் உருவாக்கப்ட்ட தொழில் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய அரிசி வகைகள், கைவினைப் பொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள், விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

தனியார் பதிப்பகத்தின் சார்பில் புத்தகக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் பல்வேறு தலைப்புகளில் ஏராளமான கவிஞர்கள், எழுத்தாளர்களின் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

புகைப்படக் கண்காட்சி அரங்கில், தினந்தோறும் மாலை நேரத்தில் பொதுமக்களின் மனங்கவரும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, அரசு இசைப்பள்ளி, பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி என 10 நாட்களும் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெறும் வகையிலும், பொழுதுபோக்கு அம்சங்களுடன் பாரம்பரிய உணவு குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதமாகவும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்து கண்டுகளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்நிகழ்வில், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், முக்கிய பிரமுகர் வைரமணி, மாநகராட்சி உதவி ஆணையர் சதீஸ்குமார், வட்டாட்சியர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Leave A Reply

Your email address will not be published.