திருச்சியில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு
திருச்சி, ஏப்.15 திருச்சி மாவட்டத்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலத்துக்கு அடுத்தபடியாக திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டமாக 2 சதவீதம் பேருக்கு மட்டுமே தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 76 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று கூடுதலாக 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் 4 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட 89 பேரில் பலர் தங்கள் வீடுகளிலும், சிலர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் 14- ஆம் தேதி 1.4 சதவீதமாக இருந்த கரோனா தொற்று பரவல் வேகம் நேற்று முன்தினம் நிலவரப்படி 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும், வெளியிடங்களுக்கு சென்றால், சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், கட்டாயம் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.