பன்னாங்கொம்பு மாரியம்மன் கோவில் பால்குட விழா
திருச்சி, மே 29 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 23 ஆம் தேதி காப்புகட்டுதலுடன் துவக்கி நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து பல்வேறு சமூகத்தினர் சார்பில் தினசரி மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா இன்று நடைபெற்றது. ஊரின் எலலையில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து வந்தனர். அப்போது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அக்கினி சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்குட ஊர்வலமானது முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்து அடைந்ததும் விநாயகருக்கு பாலாபிஷேகமும் மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திரளானோர் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து வந்தனர். ஆயிரக்கணக்கானோர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
