காதல் திருமணம் செய்த இளம் பெண் தீக்குளித்து தற்கொலை
திருச்சி, ஜுன் 7 திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள வண்ணாடு ஊராட்சிக்குட்பட்ட பச்சைமலை தோணூர் கிராமத்தில் வசிப்பவர் அழகேசன். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சின்ன இலுப்பூர் ஊரை சேர்ந்த சந்தியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடம் ஆகியும் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி இவர்களுக்குள் குடும்பத் தகராறு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கணவர் இல்லாத நேரத்தில் கணவரின் அண்ணன் மற்றும் மாமனார் ஆகியோர் அடிக்கடி உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சந்தியாவிற்கு தொந்தரவு கொடுத்ததாகவும் இதுபற்றி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தன் தாய் மணியிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அழகேசன் இன்று வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக மனைவி சந்தியாவிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து துறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் மேலும் சந்தியாவிற்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், அவரது சாவிற்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து முசிறி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.