தீக்காயமடைந்த அரசு மருத்துவமனை தற்கால ஊழியர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் கலையரசன் (28) இவர் மரவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 26 ம் தேதி கலையரசன் மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு அனுப்பி வைககப்பட்டுள்ளார். அதன்படி பணிக்கு வந்த கலையரசன் மருந்து மாத்திரைகளை தீவைத்து எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரின் சட்டையில் திடீரென தீப்பிடித்து எரியவே என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த அவர் எரியும் நெருப்புடன் சட்டையை கழற்றி வீசியபடி மருத்துவமனை வளாகத்தில் ஓடியுள்ளார். உடலில் எரியும் நெருப்புடன் ஓடியவரை பார்த்ததும் அங்கு பணியில் இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியான அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீக்காயம் 60 சதவீதம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கலையரசன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலையரசன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். தங்கள் குடும்பத்திற்கு அரசு உதவிட வேண்டும் என இறத்தவரின் தந்தை அர்ஜீணன் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.