மயான ஆக்கிரமிப்பை தடுத்த பொதுமக்கள் : குடிநீரை நிறுத்திய ஊராட்சி நிர்வாகம்

0 453
Stalin trichy visit

ஜூலை 12  திருச்சி மாவட்டம் , மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டி ஊராட்சி வடக்குசேர்பட்டியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் ரூ.5 லட்சம் திட்ட மதிப்பில்  நர்ஸரியாக மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, வளர்த்து, ஆங்காங்கே நடவு செய்வதற்காக அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் அனைத்து A.G.A.M.T கீழ் சுடுகாடு காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டு சுடுகாடு அமைக்கப்பட்ட இடத்தில் காம்பவுண்ட் சுவரை இடித்து விட்டு அங்குள்ள பொது மயானப்பகுதியில், சுமார் அரை ஏக்கர் நிலத்தினை ஊராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்து அதில் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அப்பணியினை மயான பகுதியில் செய்ய வேண்டாம் என  ஒப்பந்தகாரருக்கு அறிவுறுத்தியது. இருப்பினும் ஒப்பந்தகாரர் அந்த பணியினை  செய்து கொண்டுவந்த நிலையில் பொதுமக்கள் தரப்பில் இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி நிர்வாகம் வடக்குச்சேர்பட்டி வடக்கு தெருவில் வசிக்கும் சுமார் 10 குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகத்தை கடந்த 40 நாட்களாக நிறுத்தி வைத்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  குடிநீருக்காக சில மைல் தூரம் பயணிக்க வேண்டியிருப்பதாகவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதிலும், குழந்தைகள் குளிப்பதிலும் சிரமமடைந்து வருவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் ஊராட்சி செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவரும் குறிப்பிட்ட பகுதி பொதுமக்களை சந்தித்து அப்படி ஒரு சம்பவமே நடக்காததுபோல் சமரசம் செய்தனர். இதில் திருப்தியடையாத அப்பகுதிவாசிகள், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக தடை செய்து வைத்துள்ள குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தி தர கோரிக்கை விடுவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.