வாரிசுகளுக்கான கட்சி தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

0 230
Stalin trichy visit

திமுக டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எஸ். எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ், டி. ஆர். பி. ராஜா, வழக்கறிஞர் அணி செயலாளர் என். ஆர். இளங்கோ, துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா உள்ளிட்டோர் உரையாற்றினர். அடுத்து சிறப்புரையாற்றிய முதலமைச்சரும், தி. மு. க தலைவருமான மு. க. ஸ்டாலின் 1957 ஆம் ஆண்டு நடந்த திருச்சி மாநாட்டில் தான் தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. தி. மு. க வின் தீரர்கள் கோட்டம் தான் திருச்சி. 1971 ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களை கலைஞர் உருவாக்கி தந்தார். திருச்சியில் நடைபெறும் மாநாடுகள் எல்லாம் திருப்புமுனை மாநாடாக அமையும். பல கட்ட ஆய்வுக்கு பிறகே வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் என்கிற அடையாள அட்டை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தி. மு. க தொடங்கப்பட்டு 75 வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். தி. மு. க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி என்கிற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். கொரொனா முதல் அலையின் போது நாம் தான் நிவாரண பணிகளை முழு வீச்சில் செய்தோம். வாக்குச்சாவடி பொறுப்பாளர் என்றால் நாடாளுமன்ற தேர்தலுக்கு நீங்கள் தான் பொறுப்பாளர். வெற்றி ஒன்றே உங்கள் இலக்காக அமைய வேண்டும். பொறுப்பாளர்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பது தான் முதல் பணி, வாக்காளர்களை நம் பக்கம் ஈர்ப்பது அடுத்தக்கட்ட பணி, வாக்களர்களை அடையாளம் கண்டு பிரச்சாரம் செய்வது இரண்டாவது பணி, அவர்களை வாக்களிக்க அழைத்து வருவது மூன்றாவது பணி உங்கள் பகுதியில் ஒவ்வொரு குடும்பங்களோடும் நெருக்கமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளர் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும், அரசின் திட்டங்கள் குறித்து மிக தெளிவாக தெரிந்திருக்க வேண்டும், யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை செயல்படுத்தி தாருங்கள். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் எடுத்து வரும் கோரிக்கைகளுக்கு தி. மு. க மாவட்ட செயலாளர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீங்கள் கொண்டு வரும் தகுதி வாய்ந்த கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றி தரப்படும். நம்மை யாரும் நிராகரிக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எந்த கொம்பனும் குறை கூற முடியாத அளவிற்கு ஆட்சி நடந்து வருகிறது. எங்களுக்குள் குறை இருக்கலாம் ஆனால் ஆட்சியில் எந்த குறையும் இல்லை. நமக்கு எதிராக அவதூறுகளையும் பொய்களையும் பரப்ப ஒரு கூட்டம் செயல்பட்டு கொண்டுள்ளது. பொய்களுக்கு ஆயுசு மிக குறைவு. அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்து செல்லுங்கள் அது பொய்களை சுக்கு நூறாக்கும். சமூக ஊடகங்களில் கட்டாயம் கணக்கு தொடங்கி அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும், அதில் அரசின் மீது பரப்பப்படும் அவதூறுகளுக்கு பதில் அளியுங்கள். தேவையில்லாத சர்ச்சைகளில் ஈடுபட வேண்டாம், நமக்கு தெரிந்தோ தெரியாமலோ ஆளுநர் நமக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். ஆளுநரை மாற்ற வேண்டாம் தேர்தல் வரை அவரே இருக்கட்டும். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் ஆட்சியில் இருக்க கூடாது என்பது தான் முக்கியம். இந்தியாவின் கட்டமைப்பை பா. ஜ. க சிதைத்து விட்டது. மீண்டும் பா. ஜ. க ஆட்சி அமைந்தால் ஜனநாயகம் இருக்காது, தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலங்களும் இருக்காது. சட்டசபையும் இருக்காது, உள்ளாட்சி அமைப்புகளும் இருக்காது 40 தொகுதிகளில் மட்டுமல்ல நாடு முழுவதும் நம் அணி வெற்றி பெற வேண்டும். வட மாநிலத்தில் அதிக எம். பிக்களை வெற்றி பெற வைத்து மீண்டும் ஆட்சி அமைக்க பா. ஜ. க வினர் நினைக்கிறார்கள். ஒற்றை கட்சி ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். எனவே தான் பா. ஜ. கவை நாம் வீழ்த்த வேண்டும். இந்தியா வை காப்பாற்ற போவது இந்தியா கூட்டணி தான். இந்தியா கூட்டணியை குறித்து பிரதமர் ஏதோ ஏதே பேசி வருகிறார். தி. மு. க வாரிகளுக்கான கட்சி என தொடர்ந்து கூறி வருகிறார்கள் அதை கேட்டு கேட்டு புளித்து போய் விட்டது. நாங்கள் வாரிசுகளுக்கான கட்சி தான் ஆரியத்தை வீழ்த்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள், பெரியார், அண்ணா, கலைஞரின் வாரிசுகள் தான் நாங்கள். கோட்சேவின் வாரிசுகள் என கூற பா. ஜ. க வினருக்கு தைரியம் உண்டா? 2002 ல் குஜராத்தில் கலவரம் செய்தது போல் தற்போது மணிப்பூரில் கலவரம் செய்கிறார்கள். அதிமுகவினர் யாராவது மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசினாரா? பா. ஜ. க விற்கு அடிமை இல்லை என கூறும் பழனிச்சாமி மணிப்பூர் பிரச்சினை குறித்து பேசினாரா? பழனிச்சாமியை பக்கத்தில் வைத்து கொண்டு ஊழல் குறித்து மோடி பேசுகிறார். கர்நாடகாவில் ஊழல் செய்ததால் தான் பா. ஜ. க தோல்வி அடைந்தார்கள். இந்தியாவின் மற்ற மாநிலங்களும் மணிப்பூராகி விடாமல் நாம் காக்க வேண்டும். தமிழையும், தமிழ்நாட்டையும் காக்க பா. ஜ. க வை தோற்கடிக்க வேண்டும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் போர் படை தளபதிகள் நீங்கள், உங்களை நம்பி நாடாளுமன்ற தேர்தல் களத்தை ஒப்படைத்துள்ளேன். இந்தியா வெல்லும் அதை 2024 சொல்லும் என்றார். நிகழ்ச்சியில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட திமுக மாவட்டங்களை சேர்த்து 15 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் 12, 000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.