பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : முதியவர் உயிரிழப்பு
திருச்சி, அக்.5 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் முதியவர் உயிரிழந்தார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
சிறுகனூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (57). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி (37). இவர் தனது மோட்டார் பைக்கில் சமயபுரத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் சிறுகனூர் பகுதியில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே தமிழ்ச்செல்வன் ஓட்டி வந்த மோட்டார் பைக்கும்அந்தோணிசாமி ஓட்டிச் சென்ற மோட்டார் பைக்கும் எதிர்பாராதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் தடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அந்தோணி ராஜை சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக இருங்குளூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.