700 கிலோ மீட்டர் நடைபயணமாக செல்லும் அய்யப்ப பக்தர்கள்
சென்னையில் இருந்து சபரிமலைக்கு 700 கிலோமீட்டர் பாதயாத்திரை செல்லும் ஐயப்பபக்தர்களுக்கு திருச்சியில் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
திருச்சி ஐசிஎப் காலனி சேர்ந்தவர் தீனதயாளன் 69 இவர் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் தனது குழுவினர்களான வேணுகோபால்(68), கோவிந்தராஜன்(63), ராகவன் (73), பாலாஜி (49)
ஆகியோர் அடங்கிய ஐந்து பேருடன் சென்னையில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு செல்கின்றனர்.
இக்குழு தற்போது திருச்சியில் வந்தடைந்த நிலையில் திருச்சி ஐயப்பன் கோயிலில் சுவாமியை வழிபட்டு பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் ஐயப்ப குருசாமி தினதயாளன் கூறுகையில் கடந்த 27 வது வருடமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக எங்கள் குழுவினருடன் சென்று வருகிறோம். குறிப்பாக உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோய் தாக்குதல்கள் இல்லாமல் சுபிட்சமாக வாழ வேண்டும், நன்கு மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும், உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என ஐயப்பனுக்கு வேண்டுதல் வைத்து பாதயாத்திரை ஆக பயணம் மேற்
கொண்டுள்ளோம். சென்னையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், வத்தலகுண்டு, தேனி, கம்பம், குமுளி, வண்டிப்பெரியார், எரிமேலி, பம்பை வழியாக சன்னிதானத்தை அடைந்து ஐயப்பனை தரிசனம் செய்ய இருக்கிறோம். நாள் ஒன்றுக்கு தினசரி சராசரியாக 35 கிலோ மீட்டர் தூரம் நடப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.இவ்வாறு 700 கிலோ மீட்டர் தூரம் நடக்க திட்டமிட்டுள்ளோம்.
ஐயப்பனை மனதில் நினைத்து இரு முடியை சுமந்தவாறு ஐயப்பனை சரணம் சொல்லி அழைத்தவாறு நடந்து செல்லும் போது மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது என கூறினார். திருச்சி வந்த ஐயப்ப பாதயாத்திரை குழுவினருக்கு பக்தர்கள் வரவேற்று உணவு அளித்து உபசரித்தனர்.