திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்திற்கு விடிவுகாலம்! திருச்சி கலெக்டரின் டெல்லி பயணம் வெற்றி பெறுமா?

0 636
Stalin trichy visit

திருச்சி மக்களின் மிக நீண்ட கால எதிர்பார்ப்பாக இருப்பது திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பதுதான்!மிகவும் பழமையான-அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணியானது ஏழு வருடங்களுக்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. ரூ.81 கோடி திட்ட மதிப்பீட்டில் 2 கட்டங்களாக பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு தொடர்ந்து பாலப்பணிகள் பல தொய்வுகளுடன் நடைபெற்று வந்தது.

 

இதில் முதல்கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து தற்போது பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சென்னை பைபாஸ் சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவ நிலம் ஒப்படைக்கப்படாததால் இன்றளவும் பாலம் நிறைவடையாமல் மாவட்ட நிர்வாகமும் அமைச்சர்களும் படாத பாடுபட்டு வருகின்றனர். சென்னை செல்லும் இந்த ஒருபுற சாலையையும் பாலமாக அமைத்துவிட்டால் மத்திய பேருந்து நிலையம் வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என்பதும், இதனால் மாநகருக்குள் சீராக போக்குவரத்து வந்து செல்லும் சூழ்நிலை உருவாகும்.
இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்தின் முதல் கட்ட பணியில் சென்னை சாலை பகுதியில் பாலம் அமைக்க ராணுவத்திற்கு சொந்தமான 66 சென்ட் நிலம் தேவைப்பட்டது. இந்த நிலம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டால் தான் அந்த பகுதியில் பாலம் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய முடியும் என்ற நிலை இருந்த போது கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் ராணுவ நிலத்தை தருவதற்கு கொள்கை அளவில் பாதுகாப்பு துறை நிர்வாக ஒப்புதல் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இடம் மட்டும் இன்றி திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான சுமார் 325 ஏக்கர் நிலத்திற்கு பதிலாகவும் தமிழக அரசின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு இடம் வழங்கப்படவும் இருந்தது.

திருச்சி நிர்வாகம் சார்பாக தமிழக அரசு இதற்காக கோப்புகளை அனுப்பி மூன்று வருடமாக காத்திருந்து காத்திருந்து காலங்கள் ஓடிய கதையாய் அரசாணை வராத சூழ்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருச்சி கலெக்டர் சிவராசு ராணுவ இடத்தை பெற டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில்…”ஜங்ஷன் மேம்பால பணிகள் தேவையான ராணுவ இடத்தை பெறுவது தொடர்பாக தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் என்றும், இந்த விவகாரத்திற்காக நானும் டெல்லிக்கு நேரில் சென்று வருகிறேன் அரசாணை கிடைக்கப்பெற்றதும் கட்டுமான பணிகள் விரைவாக தொடங்கி முடிக்கப்படும்” என்றார்
.திருச்சி எம்பியாக இருக்கும் திருநாவுக்கரசர் ஏற்கனவே ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் தொடர்பாக மத்திய ராணுவ அமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில் மீண்டும் இரண்டு நாட்களில் டெல்லி செல்வதாகவும் அங்கு மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசி இராணுவ இடத்தைப் பெறுவதற்கான அரசாணையுடன் திரும்புவேன் என்றும் கூறியுள்ளார்.
எது எப்படியாக இருந்தாலும் ஏழு ஆண்டுகளை கடந்துள்ள நிலையில்   டெல்லி பயணம் ராணுவ இடத்தை பெறும் பயணமாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.