தீ விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தா.பேட்டை அருகே விறகு அடுப்பில் சமையல் செய்தபோது சிறுவன் மீது தீப்பற்றியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருச்சி, பிப். 1 திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த சின்ன கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சத்யா (9) மகளும், திஷித் (7) என்ற மகனும் உள்ளனர். இதில் திஷித் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் செளந்தர்ராஜன் மனைவி விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது மகன் திஷித் அருகில் இருந்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக திஷித் மீது மளமளவென தீ பற்றி கொண்டது. இதனைப் பார்த்து அவரது தாயார் அலறல் சத்தம் போட்டு உள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து படுகாயம் அடைந்த திஷித்தை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திஷித் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து திஷித் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.