தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்.எஸ்.பி. சாலையில் தற்காலிக காவல் உதவி மையம் திறப்பு

0 13
Stalin trichy visit

திருச்சி, அக்.31 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என்எஸ்பி சாலையில் தற்காலிக காவல் உதவி மையம் திறப்பு – மக்கள் பாதுகாப்பிற்காக 200 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி என்எஸ்பி சாலையில் தெப்பக்குளம் அருகே தற்காலிக காவல் உதவி மையம் (Temporary Police Out Post) அமைக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ்குமார் மீனா, இன்று (அக்.31) தொடங்கி வைத்தார்.

வரும் நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்குவதற்காக என்எஸ்பி சாலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும் இந்த தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், என்எஸ்பி சாலை மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV), ஒலிபெருக்கி வசதிகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

திருச்சி மாநகரில் மொத்தம் 200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்காணிக்கவும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்பாகக் கொண்டாடுவதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.