பட்டப்பகலில் வீடு புகுந்து கார் ஓட்டுநரை படுகொலை செய்த மர்ம கும்பல்
திருச்சி, பிப். 3 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள நந்தா கார்டனில் வீட்டில் இருந்த டிரைவரை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலைசெய்த மர்ம கும்பல் தப்பி ஓட்டம்.
ஸ்ரீரங்கம் தாலுக்கா திருவானைக்காவல் அருகே மேல கொண்டையம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் பரணிதரன்(38).இவருடைய மனைவி திவ்யா(32) இவர்களுக்கு மோனி ரித்திகா(16) என்ற மகளும், நிசான் (10) என்ற மகளும் உள்ளனர். பரணிதரன் கால் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில ஒரு தனியார் தங்கும் விடுதியில் வரவேற்புரையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவருடைய மனைவி காலையில் வழக்கம் போல் பணிக்குச் சென்று விட்டார். குழந்தைகளுடன் பரணிதரன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இன்னோவா காரில் வந்த நான்கு பேர் கொண்ட மர்மகும்பல் அரிவாள்களுடன் இறங்கி வீட்டுக்குள் புகுந்தனர்.அங்கு வீட்டில் இருந்த பரணிதரனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு காரில் ஏறி தப்பி்யோடினர். இதில் படுகாயம் அடைந்த பரணிதரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் மற்றும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்தனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் வந்து விசாரணை செய்தார். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் லீலி மற்றும் கைரேகை நிபுணர் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
பின்னர் உடலை கைப்பற்றிய கொள்ளிடம் போலீசார் உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை தொழில் போட்டி காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.