ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தரை வழிமறித்து முத்தரையர் சங்க நிர்வாகிகள் வாக்குவாதம்
திருச்சி, ஏப். 5 திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேளகாநத்தம் கிராமம் பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தரை புரட்சி முத்தரையர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் நாடாளுமன்ற ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிர்வாகிகளுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாரிவேந்தர் இரவு சுமார் 9.30 மணியளவில் முசிறி அருகே உள்ள காமாட்சிபட்டியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கடைசி இடமான தண்டலை புத்தூர் கிராமத்திற்கு பிரச்சாரத்திற்காக பாரிவேந்தர் புறப்பட்டார். அப்போது வேளகாநத்தம் அருகே புரட்சி முத்தரையர் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் பாரிவேந்தர் வரும் வழியில் கற்களை வைத்து மறித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பாரிவேந்தரின் உதவியாளர்கள் வாலிபர்களிடம் ஏன் எதற்காக மறுக்கிறீர்கள் என கேட்டதற்கு பாரிவேந்தர் கடந்த 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பெரம்பலூருக்கு மூவானுர், வேங்கைமண்டலம் ஆகிய பகுதிகளில் இருந்து இரண்டு பேருந்துகளில் பொது மக்களை அழைத்துக் கொண்டு சென்றோம். அப்படி சென்றபோது பெரம்பலூருக்கு முன்பாக உள்ள அம்மாபாளையம் என்ற இடத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் தற்போது வரை அவர்களின் உடல் நலம் குறித்தோ அவர்களுக்கு எவ்வித மருத்துவ உதவி செய்யாதது ஏன் நீங்கள் வேட்புமனு செய்ய நாங்கள் வந்து விபத்தில் சிக்கிய நிலையிலும், ஐஜேகே கட்சியினர் நடந்து கொண்ட முறை நியாயமானதா என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பிரச்சார வாகனங்கள் பாரிவேந்தர் வந்த வாகனத்திற்கு பின்னால் அணிவகுத்து நின்றது. கிராமத்திற்கு வழியே எல்லையில் கல் வைத்து வாலிபர்கள் சாலையை மறித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து பாரிவேந்தர் சம்பந்தப்பட்ட வாலிபர்களிடம் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் வேண்டுமானால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம். இதற்கு நாளை உரிய தீர்வு எடுக்கப்படும் என கூறினார். பின்னர் வாலிபர்கள் கற்களை அகற்றி வழிவிட்டனர். அதனைதொடர்ந்து தண்டலைபுத்தூர் கிராமத்தில் பாரிவேந்தர் பிரச்சாரம் முடித்து விட்டு புறப்பட்டுசென்றார்.
காமாட்சிபட்டியில் இருந்து செல்லும்போது வாலிபர்கள் வழிமறிக்க உள்ளதாக கிடைத்த தகவலினால் குறுக்காக உள்ள மண் பாதையில் உயர்தர கார்களில் வந்த நிலையில் வாலிபர்கள் குறுக்கு பாதையில் செல்வதை தெரிந்து பாரிவேந்தரை வழி மறித்துள்ளனர். வழிமறிப்பார்கள் என பயந்து பாரிவேந்தர் தார் சாலையை விட்டு மண் பாதையில் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பேசுபொருளாக அமைந்துள்ளது. பிரச்சாரம் முடியும் தருவாயில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக ஐஜேகே கட்சியினர் பெரும் வருத்தம் அடைந்தனர்.