திருச்சியில் குழந்தை தொழிலாளர்கள் இருவர் மீட்பு
திருச்சி, ஜூன் 8 திருச்சியில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் இருவரை போலீஸôர் மீட்டுள்ளனர். திருச்சி தேவதானம் காவிரிக்கரை சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் படுவதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை ஸ்ரீரங்கம் உதவி ஆய்வாளர் சாந்தி தலைமையிலான தொழிலாளர் நலத்துறையினர்அந்த தனியார் நிறுவனத்தில்
நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், குழந்தை தொழிலாளர்கள் இரண்டு பேர் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களை காவல்துறை உதவியுடன் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இது குறித்து தொழிலாளர் நலத்துறையினர் அளித்த புகாரின் பேரில் குறிப்பிட்ட அந்த நிறுவன உரிமையாளர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.